tamilnadu

img

குஜராத் தொழிற்சாலையை விற்கிறது ‘போர்டு’ நிறுவனம்

அகமதாபாத்:
பொருளாதார நெருக்கடி, அதிகமான ஜிஎஸ்டி வரி விதிப்பு, மின்சார வாகனக் கொள்கை ஆகியவற்றால், இந்தியாவில் வாகன விற்பனை கடும்வீழ்ச்சியடைந்துள்ளது. டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி, அசோக் லேலண்ட் என முன்னணி நிறுவனங்கள் பலவும், உற்பத்தியை நிறுத்தி ஆலைக்கு விடுமுறையளித்து வருகின்றன. இந்நிலையில், உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ‘போர்டு மோட்டார்ஸ்’, இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் இருக்கும் தனது தொழிற்சாலையையே விற்பனை செய்யும் முடிவுக்குச் சென்று, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சென்னையிலும், குஜராத்திலும் கார் மற்றும் இன்ஜின் தயாரிப்புக்காக, போர்டு நிறுவனம் தொழிற்சாலையை வைத்துள்ளது. அதில் குஜராத்தின் சனந்த் பகுதியிலிருக்கும் தொழிற்சாலையை விற்பனை செய்ய வெளிநாட்டு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தையைத் துவங்கியுள்ளது.

இந்நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்புதான் 1 பில்லியன் டாலர் முதலீட்டில் மாபெரும் தொழிற்சாலையாக, குஜராத் மாநிலத்தின் சனந்த் பகுதியில் அமைத்தது. ஆனால், தற்போது முக்கிய நிர்வாக முடிவுகளால் தொழிற்சாலையை விற்பனை செய்யும் முடிவை போர்டு எடுத்துள்ளது. ஆண்டொன்றுக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கார்களையும், 2 லட்சத்து 70 ஆயிரம் இன்ஜின்களையும் தயாரிக்கக்கூடிய அளவிற்கு போர்டு நிறுவனம் தனது தொழிற்சாலையை கட்டமைத்திருந்தது. செடான் மாடல் MdAspire மற்றும் ஹேட்ச்பேக் மாடலான பிகோ கார்களை தயாரித்து வந்தது. இவை முழுக்க முழுக்க வெளிநாட்டு ஏற்றுமதிக்கானவை ஆகும். மார்ச் 2015ஆம் ஆண்டுதான் இந்ததொழிற்சாலையில் உற்பத்தி துவங்கப்பட்டது. ஆனால், 4 ஆண்டுகளிலேயே, தொழிற்சாலையை விற்கும் முடிவுக்கு போர்டு மோட்டார்ஸ் வந்துள்ளது. இதனால், குஜராத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் கவலை அடைந்துள்ளனர். போர்டு நிறுவனத்தின், அமெரிக்கப் போட்டி நிறுவனமான ‘ஜெனரல் மோட்டார்ஸ்’ இந்தியாவில் போதுமான வர்த்தகத்தைப் பெற முடியாத காரணத்தால், 2017-இல் குஜராத்தின் ‘ஹாலோல்’ பகுதியில் இருந்த தொழிற்சாலையைச் சீனாவின் ‘சைக்’ (SAIC) குழுமத்திற்கு விற்பனை செய்து விட்டு மொத்த இந்திய வர்த்தகத்தையே கைகழுவியது குறிப்பிடத்தக்கது.